×

நெல் மூட்டைகளை பாதுகாக்க ஓசூரில் நிரந்தர கிடங்கு

ஓசூர்: ஓசூர் அந்திவாடி கூட்ரோடு பகுதியில் நெல் மூட்டை கிடங்கு திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளதால், நெல் மூட்டைகள் வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளை பாதுகாக்க நிரந்தர கிடங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர்-தளி சாலையில் உள்ள அந்திவாடி கூட்ரோடு பகுதியில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் கிடங்கு உள்ளது. வெறும் மண் தளத்தில் கற்கள் வைத்து அதன் மீது மரங்கள் வைத்து, பிரமிடுகள் போன்று மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கில் சுமார் 12 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர், கடலூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரயில் மூலம் ஓசூர் ரயில் நிலையத்திற்கு வந்த நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் அந்திவாடி கூட்ரோடு பகுதியில் உள்ள திறந்த வெளி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது. இங்கிருந்து நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 63 நெல் அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மில்லில் அரவையாக்கப்பட்ட அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பின்னர் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கும், ரேஷன் கடைகளுக்கும் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெயில், மழையில்ம் நனைந்தும், கரையான் அரித்தும் சேதமடைகிறது. எனவே இங்கு நிரந்தர நெல் கிடங்கு அமைத்து மூட்டைகளை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘விவசாயிகள் நெல் பயிரிட இரவு பகலாக பாடுபட்டு உழைக்கிறார்கள். ஒவ்வொரு நெல்மணிக்கும் அவர்கள் வியர்வை சிந்தியுள்ளனர். அது போல பாதுகாத்து பெறப்பட்ட ஒட்டுமொத்த நெல் மூட்டைகளை திறந்த வெளியில் அடுக்கப்பட்டு வெயிலாலும், மழையாலும் நனைந்து பயிராக முளைத்துள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இங்கு நிரந்தர நெல் கிடங்கு அமைத்து தர வேண்டும்,’ என்றனர்.

 

The post நெல் மூட்டைகளை பாதுகாக்க ஓசூரில் நிரந்தர கிடங்கு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Andiwadi Kootrodu ,Dinakaran ,
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்